பக்கிரிசாமி மற்றும் சந்தோஷின் வாழ்க்கையில் ஒரு நாள்
அன்றைய தினம் ஒரு புதிய அத்யாயம் தங்கள் வாழ்க்கையில் துவங்கப் போகிறது என்பதைத் தெரிந்திருக்க பக்கிரிசாமியோ சந்தோஷோ ஜோதிடர்கள் இல்லை.
பக்கிரிசாமி
அன்றைய பொழுது பக்கிரிசாமிக்கு மகிழ்ச்சியாகத் தொடங்கவில்லை. மற்ற நாட்களும் மிக வித்தியாசமாகவும் இருந்ததில்லை. தினந்தோறும் குறை சொல்லி வரும் மனைவி வேலம்மாவுடன் அன்றும் எப்பொழுதும் போல பிரச்சினை ஆரம்பித்து சண்டையில் முடிந்தது.
‘உயிரை வாங்குறியே’ என்று உணர்ச்சி வசப்பட்டு, கத்தி பக்கிரிசாமி வேலம்மாவை ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டார். அறை நல்ல பலமாகவே விழுந்தது. ஹிஸ்டீரியா வந்தது போல வேலம்மா கத்தினாள். வழக்கம் போல பல கெட்ட வார்த்தைகள் அவள் வாயிலிருந்து மழை பெய்தாற் போல விழுந்தன. பக்கிரிசாமிக்கும் தன் தவறு புரிந்தது. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டு மன்னிப்புக் கோருவதற்கு மனைவியைத் தேடினான். ஆனால், அதற்குள் வேலம்மா வேகமாக வெளியே ஓடி விட்டாள்.
இது அவர்கள் வீட்டில் அடிக்கடி நிகழ்வதுதான். ஒவ்வொரு முறையும் கோபப்பட்டுக் கொண்டு வேலம்மா வீட்டை விட்டு வெளியே ஓடி, தெரு முனையிலிருக்கும் ஒரு அரசமரத்தடிக்குப் போய் விடுவாள். அன்றும் அப்படியே அரச மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டாள். அந்த அரச மரம் தான் அவளுக்கு ஞானோதயம் கிடைக்கும் போதி மரம். மரத்தடியில் அசையாது சிலையாய் அமர்ந்திருக்கும் பிள்ளையாரிடம் தன் குறையைக் கூறுவாள். அழுவாள். தன் முந்தானையில் தன் மூக்கைச் சிந்திக் கொள்வாள். தன் உயிர் அப்படியே போய்விடாதா என்று இல்லாத தெய்வங்களையெல்லாம் கூப்பிடுவாள்.
பிள்ளையாரும் அவளிடம் பேசுவது போல அவளுக்குத் தோன்றும். தன் மீது தான் குறை என்பது போலவும் அவளுக்குத் தோன்றும். வாக்குவாதத்தை ஆரம்பித்தது தன் தவறுதானே என்று வருத்தப்படுவாள். உடனே, தன்னைத் தானேப் பழித்துக் கொள்வாள். ஒரு தன்னிரக்க நிலைக்குச் சென்று விடுவாள். அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்த பின் அவளுக்கும் ஞானோதயம் பிறக்கும். வாழ்க்கையென்றால் இப்படித்தான் இருக்கும் என்ற விழிப்பு ஏற்படும். வாழ்க்கையை குறை கூறுவதில் ஒரு பயனுமில்லை என்ற நினைப்பு வரும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தனது இரண்டு வயது பெண் குழந்தையை நினைத்துப் பார்ப்பாள்.
“பிள்ளையாரே, எனக்கு ஒரு குழந்தையைக் கொடு. என்னுடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்று முறையிடுவாள்.
அந்தப் பிரார்த்தனையுடன் வேலம்மாவின் அன்றைய பிரச்சினையும் தீர்ந்து விடும். யதார்த்த நிலைக்குத் திரும்பி விடுவாள். கண்களைத் துடைத்துக் கொண்டு ‘விறு விறு’வென்று வீட்டுக்குத் திரும்புவாள். எதுவும் நடக்காதது போல அடுப்படியில் நுழைந்து தன் வீட்டு வேலையைத் தொடங்குவாள்.
உள்ளிருந்தே குரல் கொடுப்பாள், “இன்றைக்கு புளி சோறும், மீன் கறியும் வைக்கப் போறேன். சந்தோஷம்தானே” என்று வேலைக்குக் கிளம்ப இருக்கும் பக்கிரிசாமியை தாஜா பண்ணுவாள்.
இதுதான் வழக்கமாக அவர்கள் வாழ்க்கையில் நடப்பது. இன்றும் அப்படியே நடந்தது.
பக்கிரிசாமி குறும்பாகச் சிரித்துக் கொண்டான். மெதுவாக வேலம்மாவின் பின் பக்கமாய் போய் நின்று கொண்டான். “மன்னிச்சுக்க அம்மா. இந்தப் பாழாப் போற கோபம். அடிச்சுட்டேன்.” என்று சொல்லி மனைவியிடம் குழைந்தான். இதுவும் வழக்கம்தான். வேலம்மாவும் கோபம் அடங்காதது போல நடித்தாள்.
பின்பு, அமைதியாக தன்னுடைய வழக்கமான ஐந்து இட்லிகளை மிளகாய் சட்னியில் தோய்த்து உள்ளே தள்ளினான், தன்னுடைய காக்கி யூனிஃபார்ம் உடையை அணிந்து கொண்டான். தன் வீட்டுக்கு வெளியே ரோட்டில் நிறுத்தியிருந்த மினி ட்ரக்கில் ஏறி அமர்ந்து கொண்டான்.
தன்னுடைய மினி டிரக்குக்கு ‘மயிலு’ என்று பெயரிட்டிருந்தான். பழைய வண்டியானாலும் தான் கை வைத்தால் போதும் அது பறக்கும் என்றே பக்கிரிசாமி நம்பி வந்தான். பீடி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பக்கிரிசாமி ஒரு டிரைவராக வேலை பார்த்து வந்தான். கம்பெனிக்கு சொந்தமான வண்டியானாலும் தனக்கு சொந்தமான பொருளைப் பாதுகாப்பது போல பார்த்துக் கொண்டான். அவனுக்கு தன் ‘மயிலின்’ மீது மிகுந்த அன்பு உண்டு. மயிலை ஓட்டிக்கொண்டு போகும் பல நேரங்களில் அதனுடன் பேசுவான். பாடி மகிழ்வான். சமயத்தில் அதட்டுவான். மக்கர் செய்யும் நேரம் அதனுடன் குழைவான். அப்படியாக அதை ஒரு நெருங்கிய நண்பனாய் பாவித்து வந்தான்.
டிரைவர் சீட்டுக்குப் பக்கத்திலிருந்த கதவை ஓங்கி அறைந்து சாத்திய பின்பு கதவு மூடிக்கொண்டது. கார் சாவியை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. பல முறை மயிலு இப்படி மக்கர் பண்ணியிருக்கிறது.
‘இன்றைக்கு எப்படியும் சேட்டிடம் கடைசி முறையாக கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டியதுதான். ஒன்று இந்த வண்டியை மாற்றுங்க அல்லது என்னை மாற்றுங்க’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இப்படி அவன் தனக்குள்ளேயே எத்தனையோ முறை சொல்லிக் கொண்டு சேட்டிடம் சொல்லாமல் விட்ட டயலாக்தான். பக்கிரிசாமிக்கு வேறு வேலை எதுவும் தெரியாது. வேறு திறமைகளும் போதாது. மாற்று வேலை மட்டும் என்ன உடனே கிடைக்கப் போகிறதா என்ன? ஏதோ, சேட்டு கொடுக்கும் அற்ப சம்பளத்தில் அவனது வாழ்க்கை ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டிருந்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன் மயிலை மிகவும் நேசித்தான். மயிலை விட்டு பிரிய அவனுக்கு என்றும் மனமில்லைதான்.
பக்கிரிசாமியின் உடல் நலம்தான் கொஞ்சம் கவலைப்படும் படியாக இருந்தது. அவனின் ஒரே பெண் குழந்தை இரண்டு வயதிலேயே இறந்து போன பின்பு திடீரென்று அவனுக்கு வலிப்பு வரத் தொடங்கியது. ஓட்டுனர் வேலை பறிபோய் விட்டால் என்ன செய்வது என்று பயந்து அவன் தனக்கு வலிப்பு வருவதைப் பற்றி யாருக்கும் சொல்லவில்லை. ஆனால், ஒரு நாள் தன் டிரக்கில் சரக்கு ஏற்றிக்கொண்டிருந்த சமயம் தன் முதலாளி சேட்டுக்கு முன்னேயே அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. வலிப்பிலிருந்து அவனுக்கு சுய நினைவு திரும்பிய போது முதலாளி அவன் முன்னே நின்று கொண்டிருந்தார். அவரிடம் அவன் கேட்ட முதல் கேள்வி, “முதலாளி, என்னை வேலையிலேர்ந்து தூக்கிடுவீங்களா?” என்பதுதான். வேலை போய் விட்டால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கேள்வியே அவனது உடல் நலத்தை விட மேலோங்கி நின்றது.
பக்கிரிசாமி ஒரு நல்ல, ஒழுக்கமான, நம்பிக்கையான, விசுவாசமான ஊழியன் என்பது அந்த சேட்டுக்குத் தெரியும். சுமார் பத்து வருடங்களாக அவருக்கு வேலை பார்க்கிறான். அவனுக்குக் கொடுக்கும் சம்பளமும் சுமார்தான். அவனைப் போல உண்மையான இன்னொரு ஊழியனை மீண்டும் தேடுவது கடினம். இதையும் நன்கு உணர்ந்திருந்த சேட் ‘இதுவரை என்னிடம் ஏன் நீ சொல்லவில்லை’ என்று அவனை கடிந்து கொண்டார். அவரும் தன் குடும்பத்தின் பேரில் ஒரு அறக்கட்டளை நடத்தி ஒரு சில தர்ம காரியங்களை செய்து வந்தார். உடனேயே பக்கிரிசாமிக்கு ஒரு நல்ல மருத்துவ மனையில் காண்பித்து மருந்துகளையும் வாங்கிக் கொடுத்தார். நல்ல ஆரோக்கியமான உணவுகளும் அவனுக்குக் கிடைக்க வழி செய்தார். முழு சம்பளத்துடன் ஒரு சில மாதங்கள் அவனுக்கு ஓய்வும் கொடுத்தார். கூடிய விரைவில் பக்கிரிசாமியின் உடம்பும் நன்கு தேறியது. ஒரு முறை கூட அவனுக்கு வலிப்பு திரும்பவில்லை. மருந்துகளை விடாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும், இரவு நேரத்தில் வேலை பார்க்கக் கூடாது என்றும் மருத்துவர் கண்டிப்போடு கூறிவிட்டார். பக்கிரிசாமி மீண்டும் தன் வேலையில் சேர்ந்து விட்டான். வழக்கம் போல வண்டி ஓட்டத் தொடங்கினான். வலிப்பு நோய் உள்ளவர்கள் வண்டி ஓட்டக் கூடாது என்று விதிமுறைகள் இருந்தாலும் பழையபடியே தன்னுடைய ‘மயிலு’ வண்டியைத் தொடர்ந்து ஓட்டத் துவங்கினான். சேட்டும் அதைப் பற்றி அதிகமாக கண்டு கொள்ளவில்லை. வண்டி ஓட்டும்பொழுது தனக்கு வலிப்பு வந்து விடுமோ என்ற பயம் அவ்வப்பொழுது அவனுக்கு வரும். மேலும் வண்டிக்கு சேட் முறையான இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். இந்த வேலையை உதறித் தள்ளி விட்டு ஒரு பொட்டிக்கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ வேலம்மா சொல்லிப் பார்த்து விட்டாள். பக்கிரிசாமி ஒத்துக் கொள்ளவில்லை.
‘என்னம்மா ஆச்சு, உனக்கு இன்னிக்கு,’ என்று பக்கிரிசாமி மயிலைப் பார்த்து அலுத்துக் கொண்டார். கிளம்ப மறுத்த மயிலை பல முறை தட்டிக் கொடுத்து, கையெடுத்து கும்பிட்டு வேண்டிக் கொண்ட பிறகும் பக்கிரிசாமியின் வண்டி அன்று காலை கிளம்பவில்லை. சலித்துப் போய் கைவிட்டு விடலாம் என்று நினைக்கும் நேரத்தில் ‘புர், புர்’ என்று சத்தத்தோடு டிரக் கிளம்பி விட்டது.
‘அப்பாடா,’ என்று நிம்மதியடைந்த பக்கிரிசாமி நிறுத்திய இடத்திலிருந்து மயிலை கிளப்பினார். வழக்கம் போல் வீட்டு வாசலில் நின்று கொண்டு வேலம்மா ‘டாட்டா’ சொல்லி கையசைக்க பக்கிரிசாமி வண்டியை ஒரு அழுத்து அழுத்தி வேகமாக ஓட்டினான். கரும் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் மயிலு தெரு முனையில் திரும்பும் வரை பார்த்து விட்டு வேலம்மா வீட்டினுள்ளே சென்று விட்டாள்.
கொஞ்ச தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பல வீடுகளில் பெண்கள் பீடி சுற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். எல்லாம் ஏழைக் குடும்பங்கள். முந்தைய வாரம் சுற்றியிருந்த பீடிக்கட்டுகளை அங்கேயிருக்கும் பல வீடுகளிலிருந்தும் சேகரித்து எடுத்து வர வேண்டியது பக்கிரிசாமிக்கு அன்றைய வேலை. ஒரு பெரிய சாலை வழியே சென்றால் அந்த கிராமம் போவதற்கு ஒரு சிறிய பாதை உண்டு. நடுவில் ஆளில்லா ஒரு ரெயில்வே கிராஸிங் உண்டு. அந்த வழியாக அதிகமாக ரயில்கள் போவதில்லை. தண்டவாளத்தைத் தாண்டி இன்னும் ஒரு அரை மணி நேரம் வண்டியை ஓட்டிச் சென்றால் அந்த கிராமம் வரும்.
அந்த கிராமப் புறச் சாலைக்குள் பக்கிரிசாமியின் டிரக் நுழைந்ததும் மயிலு மீண்டும் ஒரு முறை இருமுவது போல முன்னும் பின்னும் வெட்டி இழுத்தது. அப்படி ஒன்றிரண்டு முறை செய்த பின்பு இஞ்ஜின் அணைந்து விட்டது. டிரக்கும் நின்று விட்டது.
‘மயிலு’ என்று பக்கிரிசாமி ஆசையுடன் அழைக்கும் அந்த மினி டிரக் அவன் வேலை பார்க்கும் சேட்டிடம் வந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டன. சேட்டும் அந்த டிரக்கை இன்னொருவரிடமிருந்து பழைய விலைக்குத்தான் வாங்கியிருந்தார். அதனால் மயிலுக்கு நிறைய வயதாகி விட்டது. அந்த ஏழு ஆண்டுகளில் மயிலுடன் பக்கிரிசாமி மிகவும் நெருங்கிய ஒரு நண்பனாகி விட்டான். மயிலை கூடிய சீக்கிரம் காயலாங்கடைக்குத் தான் அனுப்ப வேண்டும் என்பது பக்கிரிசாமிக்குத் தெரியும். அதை நினைத்தால் பக்கிரிசாமிக்கு மிகவும் துக்கமாக இருக்கும். என்னதான் பழைய வண்டியாக இருந்தாலும் அதனுடன் தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டும், பேசியும் பாடியும் மகிழ்ந்து கொண்டும் நெருங்கிய தோழனாய் பழகியிருக்கிறான். பிரிய மனமில்லை. கடந்த ஏழு வருடங்களில் பக்கிரிசாமியையும் மயிலு என்றும் கை விட்டதில்லை.
நின்று போன டிரக்கிலிருந்து பக்கிரிசாமி கீழே இறங்கினான். வண்டிக்கு முன்னே போய் நின்று கொண்டான். ஒரு காதலியுடன் பேசும் பாவனையில், கை கால்களை ஆட்டி ‘ஏன் இப்படி வழியில் நின்று விட்டாய்’ என்று புலம்பினான். இறுதியாக தன் காதலியின் தோளில் கை போட்டுக் கொள்வது போல நினைத்து டிரக்கின் போனட்டில் கை வைத்து மயிலுடன் பேசினான்.
“வாம்மா, ரொம்ப முரண்டு பண்ணாதே. நல்ல பொண்ணு இல்லே. இன்னிக்கு ஒரு நாளைக்கு என்னைத் தொந்திரவு பண்ணாதே. ஆஃபீசுக்குப் போனவுடன் சேட்டிடம் பேசி உனக்கு ஓய்வு கொடுக்கச் சொல்லி கண்டிப்பா கேட்டுக்கிறேன். இப்ப நீ கிளம்பு,” என்று அதனுடன் செல்லமாக கடிந்து கொண்டான். அவ்வாறு மயிலுடன் கெஞ்சிய பிறகு, மீண்டும் டிரக்கில் ஏறி அமர்ந்து கொண்டான். சாவியை மீண்டும் இயக்கினான். ஆக்சிலரேட்டரை அழுத்தினான். ‘சடார்’ என்று இன்ஜின் உயிர்த்தெழுந்தது. ‘புர், புர்’ என்று மீண்டும் மீண்டும் ஆக்சிலரேட்டரை அழுத்தி மயிலுக்கு உயிர் கொடுத்த பின்பு மயிலுக்கு நன்றி சொல்லிக் கொண்டான். ‘ரொம்ப தேங்க்ஸ்’ அம்மா என்று கூறிக் கொண்டே காதலியின் கன்னத்தை தட்டுவதாக கற்பனை செய்துகொண்டு ‘டேஷ் போர்டை’ இரண்டு தட்டு தட்டிக் கொடுத்து வண்டியை மீண்டும் ஓட்டிச் சென்றான்.
உண்மையிலேயே பக்கிரிசாமி அன்று மிகவும் களைப்பாக இருந்தான். முந்தின இரவு வேலை அதிகமாக இருந்ததால் அவனுக்குத் தூங்கப் போவதற்கு மிகவும் தாமதமாகி விட்டது. இரவு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தையும் மறந்து விட்டான். இப்பொழுதுதான் அவனுக்கும் நினைவுக்கு வந்தது. மருந்து சாப்பிடுவதை எந்த சூழ்னிலயிலும் தவறக்கூடாது என்று மருத்துவர் கண்டிப்பாக கூறியிருந்த போதிலும் எப்பொழுதாவது இப்படி மருந்து உட்கொள்ள மறப்பதுதான். இதுவரை ஒன்றும் பிரச்சினையாகவில்லை.
இன்று காலை வேலம்மாவுடன் ஏற்பட்ட சண்டை வேறு அவனுக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்திருந்தது. எதற்காக சண்டை போட்டோம் என்பதை நினைவு கூற முயன்றான். அவனைப் பொறுத்த வரை முக்கியமான பிரச்சினை என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்து சிறு வயதிலேயே இறந்து போன பிறகு வேறு குழந்தை வேலம்மாவுக்கு பிறக்கவில்லை. ஒரு நல்ல மருத்துவரைப் போய் பார்க்க வேண்டும் என்று வேலம்மா பல முறை பக்கிரிசாமியிடம் முறையிட்டிருக்கிறாள். நேரமின்மை, செலவைக் கண்டு பயம் இப்படி ஏதேனும் ஒரு காரணத்துக்காக பக்கிரிசாமி தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். அன்றும் அப்படித்தான். வேலம்மா பக்கிரிசாமியிடம் மருத்துவரிடம் போவது பற்றி ஆரம்பித்தது தான் சண்டையில் போய் முடிந்தது. இப்படித்தான் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆரம்பித்து சண்டையில் முடிந்து வேலம்மா ஹிஸ்டீரியா வந்தது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவாள். பின்பு கத்துவாள். கைகலப்பு ஏற்படும். பக்கிரிசாமிக்கும் நெளிவு சுளிவு தெரியாது. முரட்டுத்தனமானவன். கையை ஓங்கி விடுவான்.
பக்கிரிசாமிக்கு புதியதாகவும் ஒரு பயம், தயக்கம் ஏற்படத் தொடங்கியிருந்தது. தற்பொழுது தனக்கு வலிப்பு இருப்பது போல பிறக்கும் குழந்தைக்கும் வலிப்பு வரத் தொடங்கினால் என்ன செய்வது என்று. அதை முறையாக வேலம்மாவிடம் எடுத்து சொல்லாததும் ஒரு பிரச்சினை. ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று பக்கிரிசாமி கூறியதை வேலம்மா ஏற்றுக்கொள்ள பலமாக மறுத்து விட்டாள்.
பல நினைவுகளோடு பக்கிரிசாமி டிரக்கை மெதுவாக ஓட்டி.ச் சென்றான். தூரத்தில் அவன் கடக்க வேண்டிய லெவல் கிராசிங் தெரிந்தது. இப்போதைக்கு ரயில் வண்டி எதுவுமில்லை போலும் என்று நினைத்தவாறே லெவல் கிராசிங்கை நெருங்கினான். பாதுகாப்புக்காகப் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டான். டிரக் லெவல் கிராசிங்கில் நுழைந்தும் விட்டது.
திடீரென்று ‘சடக், சடக்’ என்ற சத்தத்துடன் வண்டி இழுத்தது. பக்கிரிசாமி ஆக்சிலரேட்டரை அழுத்தியதும் ‘புஸ்’ என்ற சத்தத்துடன் வண்டி நின்று விட்டது. இஞ்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு பல முறை சாவி போட்டுப் பார்த்தான். பயனில்லை. ரயில் வண்டி எதுவும் வருவதற்கில்லை என்ற நம்பிக்கையால் பதட்டப்படாமல் மீண்டும் மீண்டும் முயன்றான். மயிலு ஒரு கற்பாறை போல அசைந்து கொடுக்காமல் தண்டவாளத்தின் குறுக்கே அப்படியே நின்றாள்.
வண்டியை விட்டு கீழே இறங்கினான். மயில் மீது கோபமாக வந்தது. ஆத்திரத்தில் முன் பக்க டயர் மீது காலால் இரண்டு உதை விட்டான். அங்கும் இங்கும் நோக்கினான். ஆள் நடமாட்டமேயில்ல. கோடைகாலம் முடியும் நேரமாக இருந்தாலும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வியர்த்துக் கொட்டியது. பக்கிரிசாமிக்கு எரிச்சலாக வந்தது. இன்ஜின் மிக சூடாகியிருந்தது தெரிந்தது. சூடு தணியட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தான். பின்பு மீண்டும் வண்டிக்குள் ஏறி வண்டியை கிளப்புவதற்கு முயன்றான். கிளம்பவில்லை.
மீண்டும் கீழே இறங்கினான். வண்டியின் முன் பக்கமாகப் போய் நின்று கொண்டு மயிலிடம் கெஞ்சினான். சரக்கு ஏற்றுவதற்காக பல குடும்பங்கள் அவனுக்காக காத்திருக்கும். அவர்களுக்கும் மற்ற குடும்ப வேலைகளை கவனிக்க வேண்டியிருக்கும். ‘இந்த ஒரே ஒரு முறை மட்டும் கை விட்டுடாதேயம்மா’ என்று வண்டியின் முன்னே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்காத குறையாக மயிலிடம் மன்றாடினான்.
பக்கிரிசாமிக்கு அசதியாக வேறு இருந்தது. என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அங்குமிங்கும் யாரேனும் தெரிவார்களா என்று மீண்டும் பார்த்தான். தனி ஒருவனாக வண்டியை தன்னால் தள்ள முடியாதென்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
தூரத்தில் தண்டவாளத்தில் யாரோ ஒருவர் நடந்து வருவது போலத் தெரிந்தது. பக்கிரிசாமிக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. வண்டியிலிருந்து கீழே இறங்கினான். தன் சட்டையைக் கழற்றினான். அதை தலைக்கு மேலே உயர்த்தி மீண்டும் மீண்டும் சுற்றினான். தான் நின்ற இடத்திலிருந்து கூக்குரலிட்டான். தூரத்தில் வரும் நபர் தன்னை கவனித்தாரா என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் விடாமல் இன்னும் வேகமாகச் சட்டயை சுழற்றினான். இன்னம் உரத்த குரலில் தொண்டை வலிக்கக் கத்தினான்
*****
சந்தோஷ்
சந்தோஷுக்கு தினப்படி எல்லாமே சோகமான அனுபவங்கள்தான். ‘ஏன் தான் எனக்கு சந்தோஷ் என்று பெயரிட்டார்களோ’ என்று தன் பெற்றோர்களை நொந்து கொண்டான். ஒன்றுக்கும் பயனற்றவனாகவே அவனை எல்லோரும் பார்த்தார்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவனைப் போக்கற்றவன் என்றே கருவிக் கொண்டிருந்தனர். தினப்படி ஏதேனும் ஒரு சிக்கலில் அவனை மாட்டி விடுவது கூடப் படிக்கும் மாணவர்களுக்கு பொழுது போக்கு. அவன் திக்கு முக்காடித் தவிப்பதைப் பார்ப்பதில் அவர்களுக்குப் பெரிய சந்தோஷம். எல்லோரும் கொடுக்கும் வேலைகளை அவன் செய்தே ஆக வேண்டும். செய்த பின்பும் அவனுக்குக் கிடைப்பது கிண்டல், கேலி, குற்றம் குறைகள் சொல்வது, மீண்டும் மீண்டும் செய்யச் சொல்வது போன்ற தொல்லைகள்தான். ஏன் தன்னிடம் எல்லோரும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவனுக்கு ஒரே அழுகையாக வரும்.
தன்னை அனாதையாக மாமாவின் வசம் விட்டுச் சென்ற அப்பாவின் மீது கோபமாக வரும். அவன் தாயார் பரம சாது. சந்தோஷின் இளவயதிலேயே அவள் இறந்து விட்டாள். நன்றாக இருந்த அவன் தந்தைக்கு எப்படியோ மதுப் பழக்கம் ஏற்பட்டு அதற்கு அடிமையானார். அதிகமாகக் குடித்து குடித்து வயிறு வெந்து விட்டது. கல்லீரல் பாதிக்கப் பட்டுவிட்டது. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவர் திரும்பி வீட்டுக்கு வரவேயில்லை. அவன் தந்தைக்கு கொஞ்சமாக சில நில புலன்கள் இருந்தன. அதன் மேல் ஒரு கண் வைத்திருந்த அவன் மாமா அவனுக்கு பொறுப்பாளரானார். மாமா வீட்டில் நிறைய சோறு போட்டு ஒரு கேவலமான மிருகத்தை நடத்துவது போல நடத்தினார்கள். சந்தோஷும் மிக சாது. வாயில்லாப் பூச்சி. அமைதியாகத் தன் சோகங்களைத் தாங்கிக் கொள்வான். எதிர்த்துப் பேச மாட்டான். முரண்ட மாட்டான். சந்தோஷுக்கு சிறு வயதிலேயே போலியோ தாக்கியதில் ஒரு கால் சூம்பி வளைந்து விட்டது. மற்றவர்கள் அவனைக் கிண்டல் செய்வதற்கு அதுவும் ஒரு சாக்கானது. அவன் காலை இழுத்து இழுத்து நொண்டி நடப்பதைப் பார்க்கும் பொழுது கிண்டல் செய்வார்கள். ‘நான் என்ன தவறு செய்தேன்? எனக்கேன் இப்படி ஒரு அவலமான நிலை?’ என்று கடவுளிடம் முறையிடுவான். தனக்குத் தானே புலம்புவான்.
அன்றைக்கு சந்தோஷ் வெறுப்பின் உச்சிக்கு சென்று மனம் தளர்ந்திருந்தான். பரிசோதனைக் கூடத்தில் யாரோ செய்த ஒரு விஷமத்தால் முக்கியமான ஒரு கருவி உடைந்து சிதறியது. ஆனால் பழி சந்தோஷின் மீது விழுந்தது. அவன் செய்யாத தவறுக்காக வகுப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டான். அவன் படித்து வந்த துறையின் தலைவர் அவனை கன்னா பின்னாவென்று திட்டி விட்டார். அன்று முழுவதும் கல்லூரியிலிருந்தே வெளியேற்றப்பட்டான்.
பெருத்த வருத்தத்துடன் கல்லூரியை விட்டு வெளியே வந்து கல்லூரிக்கு அருகிலேயே ஓடிய ரயில் பாதை வழியே வீட்டை நோக்கி நடந்தான். ஏதேனும் ஒரு ரயில் அந்த நேரம் பார்த்து வந்து விடாதா, தன் மீது அப்படியே ஏறிவிடாதா, அப்படியாவது தனது மனச்சோர்வுக்கு ஒரு முடிவு கிடைக்காதா என்று புலம்பிக் கொண்டே விரக்தியில் நடந்தான். உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றியது. சூரியன் மேலேயிருந்து கொதித்தான். சந்தோஷுக்கு உடம்பில் இன்னும் சூடேறியது. உடம்பும் மனதும் வெந்த நிலையில் மெதுவாகவே நடந்தான்.
வெயிலின் தாக்கத்தில் சூடான காற்று மேலெழுந்ததில் தூரத்தில் கானல் நீர் தெரிந்தது. தண்டவாளம் வழியாகவே நடந்து போனால் கொஞ்ச தூரத்தில் ரயில்வே லெவல் கிராசிங் வரும் என்பது சந்தோஷுக்குத் தெரியும். அங்கிருந்து திரும்பி கிராமப் புறச் சாலை வழியாகச் சென்றால் பெரிய சாலை வந்து விடும்.
மேலே கொஞ்ச தூரம் நடந்த பிறகு தூரத்தில் யாரோ தண்டவாளத்தில் நிற்பது போன்று சந்தோஷுக்குத் தோன்றியது. நிற்பவர் கையில் ஏதோ ஒரு துணியை வைத்துக் கொண்டு தலைக்கு மேலே சுழற்றுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அப்படித் தண்டவாளத்தின் குறுக்கே நிற்பவரின் பின்னால் ஒரு டிரக் நிற்பதும் இப்பொழுது அவனுக்கு மங்கலாகத் தெரிந்தது. ஏதோ பிரச்சினை என்பதும் விளங்கியது.
அவனுள் திடீரென்று ஒரு உத்வேகம் பிறந்தது. தன் நடையை வேகமாக்கினான். வளைந்து போன ஒரு காலுடன் அவனால் வேகமாக நடக்கவும் முடியவில்லை. கால்கள் பின்னால் இழுத்தன. இருந்தும் கடுமையாக முயன்று ஓடவும் தொடங்கினான்.
லெவல் கிராசிங்கும் நெருங்கியது. பிரச்சினை என்னவென்று புரிந்து விட்டது. அந்த மினி டிரக் தண்டவாளத்தில் நின்று விட்டது. தனி ஆளாக ஓட்டுனர் வண்டியைத் தள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். உதவிக்கும் ஆளில்லை. தன் வளைந்த கால்களையும் மறந்து தன் சக்தியையெல்லாம் திரட்டி வேகமாக லெவல் கிராசிங் அருகே ஓடினான்.
தண்டவாளத்தில் ஒருவர் நடந்து வருவதைப் பார்த்த பக்கிரிசாமிக்கு மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது. ரயில் வண்டி எதுவும் அங்கு வருவதற்கான அறிகுறிகளுமில்லை. அதனால் பயப்படுவதற்கேதுமில்லை. ஆனால், தூரத்தில் நடந்து வந்தவர் அருகில் வந்ததும் அது ஒரு இளைஞன் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால், நொண்டி நொண்டி அவன் நடந்து வருவதைக் கண்டதும் பக்கிரிசாமிக்கு ‘புஸ்’ என்று காற்று இறங்கிய பலூன் போலாகிவிட்டது. பாவம். கால்கள் சரியில்லாத இந்த இளைஞனை வைத்துக் கொண்டு தண்டவாளத்தின் குறுக்கேயிருந்து எப்படி வண்டியை எடுப்பது என்று கவலை தொற்றிக் கொண்டது.
சந்தோஷும் அருகில் வந்து விட்டான். வேறு யாரேனும் கண்ணில் தென்படுகிறார்களா என்று அங்குமிங்கும் நோக்கினான். யாரும் தென்படவில்லை.
“அண்ணே, நானும் கூடச் சேர்ந்து வண்டியைத் தள்ளறேனே?” என்று பக்கிரிசாமியிடம் கூறினான்.
உடல் உபாதையுள்ள ஒரு இளைஞனைத் தொந்திரவு செய்யலாமா என்று பக்கிரிசாமி சற்று யோசித்தான். பிறகு ‘ஆபத்துக்கு பாபமில்லை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, “வா, தம்பி, ரெண்டு பேருமா சேர்ந்து தள்ளலாம்’ என்று கூறினான். இருவரும் டிரக்கின் பின் பக்கமாகச் சென்று வண்டியை தள்ள முயற்சித்தனர்.
வண்டி லேசாக நகர்வது போலத் தோன்றினாலும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை. உடல் பலம் முழுவதையும் கொடுத்து இருவரும் தள்ளினர். சந்தோஷுக்கு கால்கள் சறுக்கிக் கொண்டிருந்தன. இருந்தும் எதுவும் சொல்லாமல் தள்ளினான். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தார்கள். இப்பொழுது ஒன்றிரண்டு அடிகள் முன்னேறியது போலத் தெரிந்தது. இருந்தும் வண்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு வெளியேறவில்லை. தண்டவாளத்துக்கிடையே போடப்பட்டிருந்த சிமெண்டும் அங்கங்கே இடம் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது பெரிய தடங்கலாகவும் இருந்தது. இன்னும் ஒன்றிரண்டு அடிகள் நகர்ந்தால் மறுபக்கம் கொஞ்சம் சரிவாக இருக்கும். வண்டி தானாகவே கூட உருண்டோடி விடும்.
“அண்ணே, வண்டியில ஏறி உட்கார்ந்து ‘ஜம்ப் ஸ்டார்ட்’ பண்ணிப் பாருங்களேன், “ என்று பரிந்துரைத்தான். பக்கிரிசாமியும் அப்படியே செய்தான். சந்தோஷ் தனியாகவே வண்டியைத் தள்ள முயற்சித்தான். கால்கள் மீண்டும் மீண்டும் வழுக்கின. இருந்தும் முயற்சியை கைவிடவில்லை. வளைந்து போன கால் வலித்தது. சந்தோஷ் பொருட்படுத்தவில்லை. தன் முழு பலத்துடன் தன் கைகளையும் தோள்களையும் முண்டு கொடுத்து வண்டியைத் தள்ளினான். இப்பொழுது உடம்பு முழுவதும் வலித்தது. அவனுடைய சக்திக்கு மீறிய செயல். பக்கிரிசாமி வண்டியின் உள்ளே உட்கார்ந்து கொண்டு வண்டியை கியரில் போட்டு அவ்வப்பொழுது கிளட்சையும் ஆக்சிலரேட்டரையும் மாறி மாறி அழுத்தி வண்டியை கிளப்ப எத்தனித்தான். முயற்சி வெற்றி பெறவில்லை.
திடீரென்று எங்கோ விசில் சத்தம் கேட்டது. “கடவுளே, ஏதேனும் ரயில் வண்டி வருகிறார் போலத் தெரிகிறதே” இருவரும் உரக்கக் கதறினர்.
“ஆனால், இந்த நேரத்தில் சரக்கு வண்டி கூட வருவதற்கில்லையே” என்று டிரக்கின் பின்னேயிருந்து கத்தினான் சந்தோஷ்.
விசில் சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது. “கடவுளே, உண்மையிலேயே ஏதோ ரயில் வண்டி வந்து கொண்டிருக்கிறது போலவே” சந்தோஷ் கதறினான். சந்தோஷ் பீதியடைந்தான். வண்டியைத் தள்ளுவதை நிறுத்தி விட்டு, டிரக்கின் பக்கவாட்டில் கைகளால் ஓங்கித் தட்டிக் கொண்டே டிரைவர் சீட்டுக்கு ஓடினான்.
ஏதோ சத்தம் கேட்டு பக்கிரிசாமியும் கழுத்தை இரண்டு பக்கங்களும் திருப்பிப் பார்த்தான். தூரத்திலிருந்து ஒரு ரயில் இன்ஜின் கொடுத்த விசில் சத்தம் நன்றாகக் கேட்டது.
தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது பக்கிரிசாமிக்கு. திடீரென்று அவன் கண்கள் செறுகின. உடல் நடுக்கம் கண்டது. கை கால்கள் வெட்டிக் கொண்டன. தாடைகள் இறுகின. உடல் முழுவதும் விரைக்கத் தொடங்கியது. சிறிது காலமாக அவனை விட்டு விலகியிருந்த வலிப்பு மீண்டும் வந்தது.
சந்தோஷும் பீதியில் உறைந்தான். பக்கிரிசாமிக்கு வலிப்பு வந்து விட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஒன்றிரண்டு நிமிடங்களில் எடுத்தது. என்ன செய்வது என்று யோசிக்கவும் முடியவில்லை. அங்குமிங்கும் நோக்கினான். வலிப்பின் போது பற்களுக்கிடையே நாக்கு மாட்டிக் கொண்டு துண்டாகிவிடும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறான். வாயில் செறுகுவதற்கு ஏதேனும் சிறிய இரும்புத் துண்டு கிடைக்குமா என்று பார்த்தான். எதுவும் அவன் கண்களில் படவில்லை.
டிரக்கின் டிரைவர் பக்கத்து கதவுகளைத் திறப்பதற்கு முயன்றான். கதவு ஜாம் ஆகியிருந்தது. திறக்க முடியவில்லை. சந்தோஷுக்கு கை கால்கள் ஓடவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ரயிலின் விசில் சத்தத்துடன் இன்ஜின் சத்தமும் கேட்டது.
மீண்டும் வண்டியின் பின் பக்கமாக ஓடினான். யாரேனும் உதவிக்குக் கிடைப்பார்களா என்று பார்த்தான். யாரும் தென்படவில்லை. தனியே வண்டியைத் தள்ள மீண்டும் முயற்சித்தான். வண்டி நகரவில்லை.
சந்தோஷுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் டிரைவர் சீட் பக்கம் ஓடி, கதவைத் திறப்பதற்கு உடல் பலம் முழுவதையும் கொடுத்து மீண்டும் இழுத்து பார்த்தான். திறக்கவில்லை. மீண்டும் வண்டிக்குப் பின்னே ஓடி தள்ள முயற்சித்தான். எதுவும் பயன் தரவில்லை.
தூரத்தில் தெரிந்த ஒரு வளைவைக் கடந்தால் ரயில் வண்டி வருவது கூடத் தெரிந்து விடும். மட மடவென்று சந்தோஷ் தன் சட்டையைக் கழட்டினான். சட்டையைத் தூக்கிக் காண்பித்து தலைக்கு மேலே சுற்றினான். இரண்டு கைகளாலும் ரயில் வண்டியை நிறுத்துவதற்கு சைகைகளை காட்டினான். இப்பொழுது ரயில் வண்டி வருவது கூடத் தெரிய ஆரம்பித்தது.
தான் நின்ற இடத்திலிருந்து கைகளை மீண்டும் மீண்டும் ஆட்டி கத்திப் பார்த்தான். ரயில் வண்டி நெருங்கிக் கொண்டிருந்தது. ரயிலை நிறுத்தும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் பக்கிரிசாமி பக்கம் ஓடினான்.
தனது வளைந்த காலை முன் பக்கம் இருந்த டயர் மீது வைத்துக் கொண்டு இன்னொரு காலை தரையில் பலமாக ஊன்றிக் கொண்டு தன் பலம் முழுவதையும் பயன்படுத்தி வெறியோடு டிரைவர் பக்கம் இருந்த கதவைத் திறப்பதற்கு இழுத்தான். இரண்டு முறை கீழே விழுந்து விட்டான்.
மூன்றாம் முறை முயன்ற போது கதவு கையோடு பெருத்த சத்தத்தோடு வந்து விட்டது. வெளியே வந்த வேகத்தில் அவனையும் சேர்த்து தள்ளிப் போட்டது.
பக்கிரிசாமியின் உடலும் அவன் இருக்கையிலிருந்து வெளிப்பக்கமாக சரிந்தது. அவனுக்கு இப்பொழுது வலிப்பு நின்றிருந்தது. மயங்கிக் கிடந்தான். அவனது உடலின் பாதி வண்டியின் உட்புறமாகவும் பாதி வெளிப்புறமாகவும் தொங்கிக் கொண்டு இருந்தது.
கீழே விழுந்த இடத்திலிருந்து சந்தோஷ் எழுந்தான். உடல் முழுவதும் வலித்தது. பல இடங்களில் பலமாக அடி பட்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் பக்கிரிசாமியை நோக்கி ஓடினான்.
ரயில் வண்டி இன்னும் அருகில் வந்து கொண்டிருந்தது.
டிரக் உள்ளே தண்ணீர் பாட்டில் எதுவும் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தான். எதுவும் இல்லை. பக்கிரிசாமியின் கன்னத்தை பல முறை தட்டிப் பார்த்தான். முகத்தை இரு புறமும் திருப்பிப் பார்த்தான். நினைவு திரும்பவில்லை. பக்கிரிசாமியை வெளியே இழுத்துப் பார்த்தான். வாட்ட சாட்டமான பக்கிரிசாமிக்கு முன்னே தன் வலிமை எதற்கும் பயன்படாது என்பது தெரிந்தது.
ரயில் வண்டி இப்பொழுது அருகாமையில் வந்து விட்டது. சந்தோஷுக்கு வேறு என்னதான் செய்வது என்பது தெரியவில்லை. ‘ரயிலை ஓட்டுபவர் தண்டவாளம் குறுக்கே ஒரு டிரக் நிற்பதைக் கூட கவனித்திருக்க மாட்டாரா?’ என்று மனதுக்குள் அந்த டிரைவரைத் திட்டிக் கொண்டான். ரயிலை நிறுத்துவதற்கு மீண்டும் முயற்சி செய்யலாமா என்று திரும்பவும் யோசித்தான். தண்டவாளத்தின் மீது மீண்டும் ஓடினான். தன் சட்டையை தலைக்கு மேலே சுழற்றி சுழற்றி சைகை செய்தான். ரயிலின் வேகம் குறைவது போலத் தெரியவில்லை. மாற்றாக ரயிலின் விசில் சத்தம் இன்னும் அதிகமாக, தொடர்ச்சியாகக் கேட்டது. ‘தண்டவாளத்தை விட்டு நகர்’ என்று அறிவிப்பது போலத் தோன்றியது.
மீண்டும் டிரக் அருகே சந்தோஷ் ஓடி வந்தான். பக்கிரிசாமி ஒரு மாதிரியாக சரிந்து கிடந்தார். கொஞ்சம் அதிர்ந்தால் வெளியே விழுந்து விடுவார் போல இருந்தது. மீண்டும் சுற்றிவரப் பார்த்தான். யாரும் கண்ணில் அகப்படவில்லை. கிராமத்திலிருந்து ஒருவர் கூடவா வெளியே வரவில்லை என்று அழத் தொடங்கினான். கை கால்கள் செயலற்றுப் போய் தன் உடம்பும் மரத்துப் போனது போல கூட அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.
“ஓ கடவுளே, எனக்கு சக்தியைக் கொடு, அல்லது மாய மந்திரம் செய்து உதவியை அனுப்பு, அல்லது ரயிலை நிறுத்து” என்று கதறினான்.
இன்னும் ஒரு ஐநூறு அடிகள்தான். ரயில் நெருங்கி விட்டது. இனி விட்டால் அதோ கதிதான். டிரக்கில் மாட்டிக் கொண்டவரை பரிதாபமாகப் பார்த்தான். என்ன பாவம் செய்தாரோ, இன்று இவருக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கிறது போலும் என்று மனதில் ஒரு தோணல் ஏற்பட்டது. பின்னர் அப்படி நினைத்ததற்காக தன்னையே கடிந்து கொண்டான்.
முந்தைய தினம் இலக்கிய ஆசிரியர் பாடம் நடத்திய போது அவர் சொன்ன ஒரு வாக்கியம் திடீரென்று நினைவுக்கு வந்தது.
“நம் வலிமையின் எல்லையை நிர்ணயிப்பது நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், கணித்திருக்கிறோம் என்பதுதான்.”
உண்மையாகவா? என் வலிமையை என்னால் நிர்ணயித்தக் கொள்ள முடியுமா?
அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. திடீரென்று தன் உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டு எழுந்தான்.
“எனக்கு வலிமையில்லாமல் போய் விட்டதா? யார் சொன்னது? இப்பொழுது காட்டுகிறேன் பார் நான் யாரென்று”
ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டான். இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதுமில்லை.
பக்கிரிசாமியிடம் மீண்டும் ஓடினான். தனது இரண்டு கைகளினால் பக்கிரிசாமியின் பலத்த உடம்பை வளைத்தான். ‘தம்’ பிடித்து தன் சக்தி முழுவதையும் திரட்டி பக்கிரிசாமியை வெளியே இழுத்தான். அவரது உடல் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. “ஆண்டவா” என்று கத்திக்கொண்டே இன்னும் ஒரு முறை பலமாக இழுத்தான். வளைந்த கால் அவனை கீழே இழுத்தது. ஆனாலும் பக்கிரிசாமியின் உடலை அவன் பிடித்துக் கொண்டதை விடவில்லை.
“இந்த ஒரு முறை மட்டும் என்னை கை விட்டு விடாதே, ஆண்டவனே” என்று மீண்டும் கத்தி பக்கிரிசாமியை இழுத்ததுதான் அவனுக்குத் தெரியும். பக்கிரிசாமியின் உடல் அவன் மேலே பொத்தென்று விழுந்தது. இருவரும் உருண்டு ஒரு பக்கமாக விழுந்தார்கள்.
அதே நேரம் தண்டவாளத்திலிருந்து மிகப் பெரிய இடி போன்ற பலத்த சத்தத்துடன் டிரக்கின் பல பாகங்கள் அங்கங்கே வீசியெறியப்பட்டன. சந்தோஷும் பக்கிரிசாமியும் தண்டவாளத்துக்கு வெளியே மயங்கிக் கிடந்தார்கள். என்ன நடந்தது என்று இருவருக்கும் நினைவில்லை.
*****
வேலம்மாவுக்கு ஒரு மகன் கிடைத்து விட்டான்
சந்தோஷ் கண்களைத் திறந்த போது ஒரு மருத்துவ மனையில் படுத்திருந்தான். அவன் உடல் முழுவதும் பல இடங்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கண்களை இடுக்கிக் கொண்டு சிரமப்பட்டு பார்த்தான். அவன் முன்னே தன் கல்லூரி முதல்வர், பேராசிரியர், கூடப் படிக்கும் மாணவர்கள் என பலரும் சூழ்ந்திருந்தனர். அவன் கண் திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர் போல் தெரிந்தது. கனவா நனவா என்று புரியவில்லை.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாட்களாக மருத்துவர்கள் அவன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்திருக்கின்றனர். அவன் உடம்பில் ஒவ்வொரு எலும்பும் நொறுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தாடை முறுகியிருந்தது. உதடுகள் பிளவு பட்டிருந்தன. கன்னங்கள் கிழிந்திருந்தன. மூக்கு உடைபட்டிருந்தது. நான்கைந்து பற்கள் பொடிப் பொடியாகியிருந்தன. உடம்பில் பல இடங்களில் பலத்த அடி. அவன் உயிர் போய்விட்டது என்றே மருத்துவர்கள் கருதியிருந்தார்கள்.
நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒரு இன்ஜின் மட்டுமே தண்டவாளத்தில் வந்திருந்திருக்கிறது. முழு ரயில் வண்டி பல பெட்டிகளுடன் வந்திருந்தால் அதோ கதிதான். அதனால் சந்தோஷும் பக்கிரிசாமியும் பிழைத்தனர். ஒரு அவசர அழைப்புக்காக இன்ஜின் டிரைவர் அருகாமையிலிருந்த இன்னொரு ரயில் நிலையத்துக்கு இன்ஜினை எடுத்துச் சென்றிருந்திருக்கிறார். கொஞ்சம் கவனக் குறைவாகவும் இருந்திருக்கிறார். இன்ஜினை நிறுத்துவதற்கு ப்ரேக் பிடித்திருக்கிறார். ஆனால், தாமதமாக ப்ரேக் பிடித்ததினால் இன்ஜின் வேகம் குறைந்ததே தவிர நிற்கவில்லை. பக்கிரிசாமியின் டிரக்கின் பின் பகுதி மட்டும் தண்டவாளத்தில் மாட்டிக் கொண்டிருந்ததால் தூக்கி எறியப்பட்டிருந்தது. அதன் பல பாகங்களும் தனித் தனியே அங்கங்கே வீசியெறியப்பட்டிருந்தன.
சந்தோஷும் பக்கிரிசாமியும் தப்பித்தது அதிசயம்தான். தண்டவாளத்தின் ஒரு சில அடி தூரத்தில் இருவரும் ஒருவர் மேல் ஒருவராக விழுந்து கிடந்தனர். டிரக்கின் ஒரு சக்கரம் உடைந்து உருண்டு வந்து அவர்களைப் பாதுகாப்பது போல அவர்கள் மேல் விழுந்து கிடந்தது. பக்கிரிசாமிக்கு தலையில் பலமான அடி. பல இடங்களில் தையல் போட வேண்டியிருந்தது. மற்றபடி உடம்பில் அடிபட்ட காயம்தான். அவனும் பிழைத்து விட்டான்.
சந்தோஷ் கண் திறந்து எல்லோரயும் ஒரு பார்வை பார்த்தான். கல்லூரி முதல்வர் அவன் அருகே நெருங்கி அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நீ நிரூபித்து விட்டாய். முதலில், எங்களையெல்லாம் நீ மன்னிக்க வேண்டும். கல்லூரியில் உன்னைக் கேவலமாக நடத்தியதற்கு நாங்களெல்லாம் வெட்கப்படுகிறோம். உன்னிடம் மன்னிப்பு கோருகிறோம். மருத்துவர் உனக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது நீ ஏதோ அரை குறையாக முனகிக் கொண்டிருந்திருக்கிறாய். அதிலிருந்துதான் உன்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்திருக்கிறார். உன்னுடைய மன வருத்தத்தைப் பற்றி மருத்துவர் எங்களுக்கும் கூறினார். அந்த இன்ஜின் டிரைவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். தவறு தன் மீது இருந்தாலும் அவர்தான் உடனே உன்னையும் பக்கிரிசாமியையும் இங்கே மருத்துவ மனைக்குக் தாமதமில்லாமல் கொண்டு வர ஏற்பாடு செய்திருக்கிறார். மீண்டும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எங்களை மன்னித்து விடு.”
“வெளியே வேலம்மா காத்துக் கொண்டிருக்கிறாள். தன் கணவனுக்காக மட்டும் இல்லை. தன் குழந்தைக்காகவும்தான். ஆமாம், அவள் வணங்கும் பிள்ளையார்தான் உன் மூலமாக அவள் கணவனை காப்பாற்றியதாக நம்புகிறாள். உன்னையே தன் பிள்ளையாக நினைக்கிறாள்.”
சந்தோஷுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தன் ஊன உடலையும் வைத்துக் கொண்டு இன்னொரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம் என்ற நினைப்பில் அவனுக்கு அபரிதமான தன்னம்பிக்கை பிறந்தது. இனிமேல் யாரும் தன்னை தாழ்த்தப்படுத்தி பேச மாட்டார்கள். தாழ்மையாகப் பார்க்க மாட்டார்கள். அப்படிப் பார்க்கவோ பேசவோ தானும் இடம் கொடுக்க மாட்டேன் என்ற புதிய நம்பிக்கை உண்டானது.
இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு வேலம்மாவும் சந்தோஷ் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. சந்தோஷின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு வெகு நேரம் நன்றி உணர்வோடு அழுது கொண்டிருந்தாள்.
*****