Sri Amma Bhagawan Sharanam
Sri  Amma Bhagawan Sharanam

இருதயம்

நான் வியக்கும் மனித உடம்பு – இருதயம்

  1. இருதயத்துக்கும் அன்புக்கும் என்ன தொடர்பு என்பது யாருக்கும் தெரியாது. பண்டைய காலங்களில் ஒருவரது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் இருதயம் கட்டுப்படுத்தியதாக நம்பிக்கை இருந்து வந்தது.
  2. நமது கையை மார்பில் வைக்கும் ஒவ்வொரு முறையும் இதயம் ‘டப், டப்’ என்று துடிப்பதை உணர முடியும். ஆனால், இதயத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியுமா?
  3. தசைநார்களாலான இருதயம் இரத்த நாளங்கள் வழியாக உடம்பிலிருக்கும் சுமார் 75 லட்சம் கோடி உயிரணுக்களுக்கும் இடைவிடாது ஆக்சிஜன் வாயுவையும் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
  4. ஒருவரின் இருதயத் துடிப்பின் சத்தம் அந்த இருதயத்தின் வால்வுகள் திறந்து மூடுவதினால் ஏற்படுகிறது. 
  5. இருதயம் நெஞ்சு எலும்புக் கூட்டினுள்ளே பாதுகாக்கப்பட்டு வருகிறது.  
  6. கை முட்டியளவே இருக்கும் இருதயம் சுமார் 300 கிராம் எடை கொண்டது.
  7. ஒருவரின் இருதயம் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. அதாவது, ஒரு மணிக்கு 4800 முறையும், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறையும், ஒரு ஆண்டில் 4.2 கோடி முறையும், ஒருவரின் ஆயுளில் 300 கோடி முறையும் துடிக்கிறது.  
  8. ஒரு சராசரி மனிதரின் உடம்பில் சுமார் 10.5 பின்ட் (அதாவது சுமார் 5 லிட்டர்) (1 Pint is equal to 0.47317647299 liter) அளவு இரத்தம் இருக்கும்.
  9. ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 280 லிட்டர் இரத்தத்தையும் ஒவ்வொரு நாளும் சுமார் 2000 கேலன் அளவு ரத்தத்தையும் இருதயம் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.
  10. ஒருவரின் இரத்த நாளங்களையெல்லாம் – அதாவது தமனி, இரத்தக் குழாய், மற்றும் தந்துகி என்ற இரத்த நுண் குழாய் – முனையோடு முனை சேர்த்து வைத்தால் சுமார் 60000 மைல் அளவு நீளமாக இருக்கும். 
  11. ஒரு நுண்ணிய மின்விசையால் இருதயத்தின் தசைகள் சுருங்குகின்றன. உடலை விட்டு வெளியே எடுத்தால் கூட இந்த மின்விசையால் ஆக்சிஜன் இருக்கும் வரை துடிக்கக்கூடும். 
  12. இருதயம் மற்றும் அதன் வால்வுகளின் எந்தப் பகுதி பழுதடைந்தாலும் ரத்தத்தை வெளியேற்றும் அதன் திறன் பழுதடையும். அதனால் உடலின் பல பாகங்களின் ரத்தத்தின் தேவைக்காக இருதயம் முன்னை விட இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
  13. இடது அட்ரியம் (இருதய ஊற்றறை) வலது அட்ரியம் (வலது ஊற்றறை), இடது வென்ட்ரிக்கிள் (இடது இருதய கீழறை) வலது வென்ட்ரிக்கிள் (வலது இருதய கீழறை) என்ற நான்கு அறைகளைக் கொண்டது இருதயம். அதைத் தவிர வால்வுகள் (அடைப்பான்கள்) இரத்தம் சீராக சரியான திசையில் போய்வருவதற்கு உதவி புரிகின்றன.
  14. இருதயத்திலிருந்து வெளியே செல்லும் இரத்தம் ‘ஆர்டெரி’ எனப்படும் தமனிகள் வழியாகச் செல்கின்றன. இடது வென்ட்ரிக்கிளிலிருந்து (கீழறைகளிலிருந்து) வெளியேறும் தலையான ஆர்டெரிக்கு ‘ஆர்டா’ (பெருநாடி) என்று பெயர். இதன் மூலம் ஆக்சிஜன் ஏற்றப்பட்ட இரத்தம் உடலின் பல உறுப்புகளுக்கும் சென்று அடைகிறது. இந்தப் பெருந்தமனி இருதயத்திலிருந்து வயிற்றுப் பகுதி வரை வியாபித்திருக்கிறது.  நமது தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சும் குழாய்கள் அளவு பெரியது.
  15. வலது ‘வென்ட்ரிக்கிள்’ளிலிருந்து வெளியேறும் தலையான ஆர்டெரி (pulmonary artery) ஆக்சிஜன் இல்லாத சுத்தப்படுத்த வேண்டிய இரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது. 
  16. இருதயத்துக்குச் செல்லும் இரத்தம் குருதிநாளம் வழியாகச் (veins) செல்கிறது. ஆக்சிஜன் ஏற்றம் செய்யப்பட்ட இரத்தம் நுரையீரலிலிருந்து இருதயத்தின் இடது அட்ரியத்துக்கு வருகிறது. சுத்தப்படுத்த வேண்டிய ஆக்சிஜன் ஏற்றம் செய்யப்பட வேண்டிய இரத்தம் வலது அட்ரியத்துக்கு வருகிறது.
  17. இருதயம் சுருங்கி விரிவதனால் அதன் அறைகள் சுருங்கி விரிகின்றன. இருதயம் சுருங்கும்போது அறைகள் சுருங்குகின்றன. அதனால், இரத்தம் இருதயத்தை விட்டு வெளியேறுகிறது. இருதயம் விரியும்போது அதன் அறைகள் விரிகின்றன. அதனால், இரத்தம் இருதயத்துக்குள் நுழைகிறது. 
  18. ஒரு சில ரத்த  நுண்குழாய்கள் மயிரிழையை விட மெல்லியதானவை.
  19. இரத்தத்தை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறை விடாது புதுப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் ‘போன் மேரோ’ (எலும்பு மஜ்ஜை) 30 லட்சம் புதிய சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.
  20. இருதயத்துக்குள் நுழையும் சுத்தப்படுத்த வேண்டிய இரத்தம் ஆக்சிஜன் இல்லாமையால் கருஞ்சிவப்பு-ஊதா நிறத்தில் காணப்படுகிறது. இருதயத்திலிருந்து வெளியேறும் இரத்தம் ஆக்சிஜன் ஏற்றத்தினால் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
  21. இருதயத் துடிப்பு எல்லோருக்கும் ஒன்று போல இருப்பதில்லை. ஒரே நாளில் கூட வேறு வேறு சமயங்களில் இதயத் துடிப்பு மாறுபடுகிறது. உதாரணத்துக்கு, ஒருவர் உறங்கும்போது உணவை செரிக்கவைக்கும் வேதீய விளைவுகள் குறைகின்றன. உடம்பு இருதயத் துடிப்பின் வேகத்தைக் குறைத்துக்கொண்டும், தசைகளைத் தளர்த்திக் கொண்டும் தன் ஆற்றலை சேமித்துக்கொள்கிறது. உடற்கட்டைப் பொருத்தும் இருதயத் துடிப்பு மாறுகிறது. கடுமையான வேலைகளைச் செய்யும் பொழுது உடம்பிற்கு கூடுதல் இரத்தம் தேவைப்படுவதால் இருதயம் கடுமையாக வேலை செய்யும்.
  22. ஒரு பெண்ணின் இருதயம் சராசரியாக ஆணின் இருதயத்தை விட வேகமாகத் துடிக்கிறது. புதியதாகப் பிறந்த குழந்தையின் இருதயம் தான் இருப்பதிலேயே அதிக வேகமாகத் துடிக்கிறது.
  23. உடம்பின் எல்லாப் பகுதிகளுக்கும் இருதயத்திலிருந்து இரத்த ஓட்டம் கிடைத்தாலும், விழித்திரைகளுக்கு மட்டும் கிடைப்பதில்லை. ஏனென்றால், விழித்திரைகளுக்கு இரத்த நாளங்கள் கிடையாது. மேலும், விழித்திரைக்கு தேவையான ஆக்சிஜனை காற்றிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. தேவையான சத்துக்களையும் கண்ணீரிலிருந்து பெற்றுக்கொள்கிறது.
  24. இரத்த நாளங்கள் (தமனிகள்) பொதுவாக 4 மி. மீட்டருக்கும் குறைவான விட்டத்தைக் கொண்டவை. அதனால், தேவையற்ற கொழுப்புகள் இந்த நாளங்களை அடைத்துக்கொண்டு இருதயத்தைப் பாதிக்கக் கூடும்.
  25. அதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஒரு ஆணின் இருதயமும் ஒரு பெண்ணின் இருதயமும் சரிசமமாகப் படைக்கப்படவில்லை. உதாரணத்துக்கு, ஒரு ஆணின் இருதயம் சுமார் 10 ஔன்ஸ் எடை கொண்டதாகவும் ஒரு பெண்ணின் இருதயம் ஆணின் இருதயத்தை விட சுமார் 2 ஔன்ஸ் எடை குறைவாகவும் காணப்படுகிறது.
  26. ஒரு பெண்ணின் இருதயம் ஆணின் இருதயத்தை விட சிறியதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் இருதயம் பழுதுபட்டிருந்தால் அது வெளிப்படையாகத் தெரிவது குறைவு. ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு நேரிட்டால் அவருக்கு வாந்தியெடுப்பது, அஜீரணம், மற்றும் தோள்களில் வலி போன்ற அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படுவது போன்ற நெஞ்சுவலி அதிகமாகத் தெரிவதில்லை.
  27. நீங்கள் ஓய்வெடுக்கும் நேரம் இருதயத்திலிருந்து நுரையீரலுக்கும் பின்னர் இருதயத்துக்குத் திரும்பவும் இரத்தம் சுழன்று வருவதற்கு 6 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது. மூளைக்குச் சென்று வர 8 வினாடிகள், கால் நுனிக்குச் சென்று வர 16 வினாடிகளும் எடுத்துக்கொள்கிறது.
  28. உடற்பயிற்சி செய்யும் நேரம் உங்கள் இருதயம் உடல் முழுவதற்கும் இரத்தத்தையும் அதன் மூலம் ஆக்சிஜனையும் அனுப்புவதற்கு வேகமாகத் துடிக்கிறது.  
  29. இருதயம் சம்பந்தப்பட்ட துறைக்கு ஆங்கிலத்தில் கார்டியாலஜி என்றும் இருதய நிபுணருக்கு கார்டியாலஜிஸ்ட் என்று பெயர்.  
  30. மார்படைப்பு (heart attack), மிக அதிக இரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்ஷன்), இருதயம் துடிப்பது நின்று விடுவது (heart failure) போன்றவை இருதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள்.
  31. இருதய நோய் ஒரு உயிர்கொல்லி நோய். புகைபிடித்தல், சரியான உடற்பயிற்சியின்மை, அதிக இரத்த அழுத்தம் போன்றவை இருதயத்தைப் பாதிக்கும். இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இருதயம் நின்று விடச் செய்யும்.
  32. ECG எனப்படும் ஒரு இயந்திரம் இருதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசையையும் அதன் மூலம அதன் துடிப்பின் ரிதமையும் அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. இருதயத்தைப் பரிசோதனை செய்ய இது பயன்படுகிறது. எக்கோ கார்டியோகிராம் (ECHOCARDIOGRAM) என்ற இன்னொரு கருவி இருதயத்தின் கட்டமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் கண்காணிக்க உதவுகிறது.
  33. இருதயத்தின் இரத்தத் துடிப்பால் ஏற்படும் அழுத்தத்தால் சுமார் 30 அடி தூரத்துக்கு இரத்தத்தை பீச்சி எறிய முடியும்.  
  34. ஒரு ஓட்டப்பந்தய வீரரின் கால் தசைகளை விட இருதயம் இரண்டு மடங்கு கடுமையாக வேலை செய்கிறது.
  35. உடைந்த இதயம் என்பது திடீரென்று தோன்றும் அழுத்தமான சோகமான உணர்ச்சிகளால் ஏற்படக்கூடியது. அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் திடீரென்று வெளியேற்றப்படுவதால் இது மார்பு வலி போலத் தோன்றினாலும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் சரியாகி விடும்.
  36. பெரும்பாலானவர்கள் நம்புவது போல, தும்மும்போது இருதயம் நின்றுவிடுவதில்லை. இரத்த ஓட்டம் குறைவதினால் இருதயம் துடிக்கும் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறது. அதனால் இருதயம் துடிப்பது நின்றுவிடுவது போலத் தோன்றுகிறது. இருதயத்தின் மின்னியக்கம் வழக்கம் போலவே தும்மும் பொழுதும் நடைபெற்று வருகிறது.
  37. ஒரு சிலருக்கு தூங்கும்போது மூச்சு விடுவது நின்று நின்று தொடர்கிறது. ஆங்கிலத்தில் இதற்கு sleep apnea என்று பெயர். Sleep apnea போது உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் அவரின் இருதயம் பாதிக்கப்படுகிறது.
  38. சிரிப்பது இருதயத்துக்கு ஒரு நல்ல மருந்து என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நன்றாகச் சிரிக்கும்போது உடலுக்கு 20% கூடுதலாக ரத்தத்தை இருதயம் பம்ப் செய்கிறது. ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்க்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சிரிக்கும்போது ரத்தம் ஓடும் நாளங்களில் சுவர்கள் விரிவடைகின்றன, அமைதிப்படுகிறது.
  39. ஒருவருக்கும் மாரடைப்பு பல நேரங்களில் திங்கட்கிழமை காலையில் அதிகமாக ஏற்படுவதாக ஒரு அராய்ச்சி கூறுகிறது. இது ஏனென்றால், கார்டிசால் என்றழைக்கப்படும் அழுத்தத்துக்குக் காரணமான ஒரு ஹார்மோன் காலை வேளைகளில் அதிகமாக சுரக்கப்படுகிறது. அப்படி சுரக்கும்போது கொலெஸ்ட்ரால் என்ற கொழுப்பின் தகடுகள் ரத்த தமனியில் சேகரிக்கத் தொடங்குகின்றன. அவை ரத்த ஓட்டத்தை தடுக்கும். அதோடு, வார இறுதி விடுமுறைக்குப் பிறகு திங்களன்று மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டுமே என்ற சலிப்பும் அழுத்தமும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. மாரடைப்புக்கு வேறு காரணம் வேண்டுமா?
  40. இன்னொரு வித்தியாசமான கண்டுபிடிப்பு என்னவென்றால், ஆண்களுக்கு பாலியல் உடலுறவு வைத்துக்கொள்வது மாரடைப்பினால் ஏற்படும் மரணத்தை 50% குறைக்கிறது. இது பெண்களுக்கும் பொருந்துமா என்பது இன்னமும் தீர்மானமாகத் தெரியவில்லை. உடலுறவு கொண்ட பிறகு ஒருவருக்கு அழுத்தம் குறைகிறது. அரைமணி நேரம் உடலுறவில் சுமார் 85 கலோரி சக்தி எரிக்கப்படுகிறது என்கிறார்கள்.  
  41.                                                      ******
  42. 1893-ல் முதன் முதலாக இருதய சர்ஜரி அமெரிக்காவில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு இருதய சிகிச்சை நிபுணரால் செய்யப்பட்டது.
  43. இருதயத்தை சரியாக துடிக்க வைக்கும் பேஸ்மேக்கர் கருவி முதன் முறையாக 1958-ல் பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாளியான ஆர்னே லார்சன் என்பவர் தனது 86-ஆவது வயதில் இருதயத்துக்கு சம்பந்தமில்லாத வேறு காரணத்தினால் மரணமடைந்தார். அதைப் பொருத்திய மருத்துவரை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
  44. இருதய சிகிச்சை பெற்றுக்கொண்டதில் மிகவும் இளமையானவர் பிறந்து ஒரு நிமிடமே ஆன ஒரு குழந்தை. அவருக்கு மாற்று இருதயம் தேவைப்பட்டது.
  45. எகிப்து நாட்டின் மம்மிகளிடையே தான் உலகின் இருதய நோய் இருந்ததற்கு ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன.

                                                                 *******

என்னுடைய வலைப் பதிவின் புதிய பக்கம்:

கடந்த வார நாட்குறிப்பு;

என் அனுபவங்களின் மீது ஒரு கண்ணோட்டம்.

My Blog:

www.neel48.blogspot.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Print | Sitemap
© Tirunelveli Natarajan Neelakantan