உங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு தோட்டம் இருக்கிறதா, அங்கே போங்க.
இல்லை, உங்கள் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் தூரத்தில் ஒரு மலை தெரிகிறதா? இல்லை, மேலே வானத்தைப் பார்த்தால் மேகங்கள் ஓடுகின்றனவா அல்லது நட்சத்திரங்கள் மின்மினுக்கின்றனவா?
இல்லை, நீங்க நடந்து போகிற வழியில் ஒரு பெரிய மரம் இருக்கிறதா?
ஓண்ணுமில்லை, நீங்கள் நிற்கிற இடத்தில் புல் காடாக வளர்ந்திருக்கிறதா?
எதானாலும் சரி, உங்களைச் சுற்றி ஒரு நோட்டம் விடுங்கள். உங்கள் தோட்டம், மலை, மரம், செடி, கொடிகள், புல் எல்லாமே எவ்வளவு அழகு. எவ்வளவு அதிசயம்.
இந்த உலகம் எவ்வளவு அதிசயமானது, பாருங்கள். இயற்கை எவ்வளவு அழகானது, அதிசயமானது பாருங்கள். எவ்வளவு வியப்புக்குரியது என்று பாருங்கள்.
அணுவுக்குள்ளே இருக்கும் நுண்ணிய துகள்களாக இருக்கட்டும் அல்லது வானத்தில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் கோள்களாக இருக்கட்டும், விண்மீன்களாக இருக்கட்டும். வியப்பதற்கு எல்லையே இல்லை.
இயற்கையில் எல்லாமே வியக்கத் தக்கவை. பிரம்மாண்டமானவை.
எனது பள்ளிக்கூட நாட்களில் விடுமுறை காலங்களில் நான் சென்னைக்குப் போய் வந்ததுண்டு. என்னுடைய சின்ன தாத்தா, பாட்டி சேப்பாக்கத்தில் குடியிருந்த சமயம். அவர்கள் வீட்டில்தான் நான் தங்கியிருப்பேன். என்னுடைய அம்மா வழிப் பாட்டியும் கூட இருப்பார்கள். மாலை வேளைகளில் நானும் என் பாட்டியும் பொடி நடையாக சேப்பாக்கம் வீட்டிலுருந்து பீச் வரை நடந்து வந்து விடுவோம். இரவு நன்றாக இருட்டிய பின்பும் கடற்கரை மணலில் நான் படுத்திருந்து வானத்தை, நட்சத்திரக் கூட்டத்தை, வெட்ட வெளியை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன். பார்த்துப் பார்த்து மலைத்திருப்பேன் “ஆஹா, எவ்வளவு அழகு, எவ்வளவு பிரம்மாண்டம்” என்று.
அதனால்தானோ என்னவோ, பின்னர் பணி ஓய்வு பெற்று பிறகு தென்காசியில் குடிபுகுந்த பிறகு மாணவர்களுக்காக வினாடி வினா போட்டி ஆங்கிலத்தில் நடத்தத் தொடங்கியபோது நான் முதலில் கையில் எடுத்த தலைப்பு “சூரிய மண்டலமும் விண்வெளியும்” தான்.
விண்வெளியைத் தொடர்ந்து நான் வியந்தது மனித உடம்பு பற்றிதான். அதைத்தான் என்னுடைய அடுத்த வினாடி வினா போட்டிக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்தேன்.
ஆம், நீங்கள் வியப்பதற்கு முக்கியமான இன்னொன்று உங்கள் உடம்பு.
மனித உடம்பு மிக மிக அற்புதமானது. கடுமையாக உழைக்கும் இருதயம், நம்பவே முடியாத அளவு செயல்படும் மூளை இப்படி பல சிக்கலான செயல்களை ஆற்றும் சிக்கலான உறுப்புகளைக் கொண்டது மனித உடம்பு.
என்னுடைய வினாடி வினா போட்டிக்காக மனித உடம்பைப் பற்றி ஒரு கையேடு புத்தகம் ஆங்கிலத்தில் தொகுத்தேன். அதைத் தொகுத்தபோது நான் படித்துத் தெரிந்து கொண்ட தகவல்களை நினைத்துப் பார்த்து நமது மனித உடல் எவ்வளவு வினோதமான ஒரு படைப்பு என்று மீண்டும் மீண்டும் வியந்திருக்கிறேன். மனித உடல் மட்டுமில்லை. எல்லா உயிரினங்களும் வியக்கத்தக்க படைப்புதான்.
இவ்வளவு சிக்கலான ஆனால் சீராக செயல்படும் ஒரு இயந்திரநுட்பத்தை யாரால்தான் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியும் என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன்.
நாம் நம்மை ஏதோ சாதாரணம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு அதிசயப் பிறவி என்பதில் சந்தேகமேயில்லை.
நாம் ஒவ்வொருவரும் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழத் தகுந்த முறையில் படைக்கப்பட்ட நிற்காத, நிரந்தர இயந்திரம். நமது உடலுக்குள்ளே லட்சக்கணக்கான செயல்பாடுகள் வியக்கத்தக்க வகையில் ஒரு வினாடி கூட தடங்கலில்லாமல் நடந்து வருகின்றன. ஒவ்வொரு செயல்பாட்டையும் நினைத்து நினைத்து நான் இன்னமும் வியக்கிறேன்.
நான் வியந்து உணர்ந்ததில் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். முக்கியமான இளைஞர்களுக்கு, சிறுவர்களுக்கு, மாணவர்களுக்கு இந்தத் தகவல்கள் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மனித உடலைப் பற்றிய ஒரு சில சுவாரசியமான தகவல்களை விளக்கமாகவும் ஒரு சிலவற்றை சுருக்கமாகவும் இனி நாம் பார்க்கலாம்.
நான் கொடுக்கப்போகும் தகவல்கள் எல்லாவற்றையுமே இணையதளத்திலிருந்துதான் எடுத்திருக்கிறேன். ஒரு சில வலைப்பக்கங்களின் விவரத்தை இந்தத் தொகுப்பின் இறுதியில் கொடுக்கிறேன்.
உடலைப் பற்றிய ஒரு சில சுவாரசியமான தகவல்களை மிகச் சுருக்கமாக கொடுத்து இந்த் வீடியோத் தொடரை ஆரம்பிக்கிறேன்.